ஏன் இறைவனை துன்பத்தில் மட்டும் தேடுகிறீர்கள் ? நீங்கள் உங்களையே ஒருமுறை கேட்டுக் கொள்ளுங்கள் .கடைசியாக எப்போது இறைவனை தேடினீர்கள் ? எப்போது அவனை உணர்ந்தீர்கள் என்று ? நீங்கள் துன்பத்தில் தவித்தபோதா ? பெரும்பான்மையாக, ஆம் என்றால் தொடர்ந்து படியுங்கள்.
நீங்கள் உள்ள களிப்பில் இருக்கும்போது இறைவனைத் தேடியது உண்டா ? கேட்டது கிடைக்கும் போது செய்யும் நேர்த்திக்கடன் இதன் சேராது.
ஏன் இது இப்படி ?
உங்களைக் கேட்கின்ற படியே என்னை நானே கேட்டு கொண்டேன்.அதுகாறும் ஏற்பட்ட சிந்தனை ஓட்டத்தை சொல்கிறேன், கேளுங்கள்.
பல சமயங்கள் பொதுவாக என்ன சொல்கின்றது என்றால் இந்த யுகத்தில் இறைவனை நேரில் பார்க்க இயலாதாம் ! உணரத்தான் இயலுமாம்.
சரி அது இருக்கட்டும், ஏன் இறைவன் இருப்பதை உணர துன்பத்தில் மட்டும் தேடுகிறோம் பெரும்பான்மையாக.
நாம் துன்பத்தில் துயரும் போது உடலாலும் உள்ளத்தாலும் நான் மட்டுமல்லாது நம்மை சுற்றி உள்ளோரும் நலிவடைந்து இருக்கிறோம். நம் நிலையை கேட்கும் அனைவரும் பரிதாபம் கொள்கின்றனர். இந்த நிலை மாறிவிடும், மனதை விட்டு விடாதீர்கள் என்று தேற்றத்தான் செய்கின்றனர்.
இருந்தும் உளமார நம்ப மறுக்கின்றது நம் மனம். ஏன்? அவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே! துன்பத்தையும் மகிழ்ச்சியையும் ஒன்றாக வைத்துப் பார்க்கத் தெரியாதவர்கள்.
ஆனால் இறைவன் துன்பத்திற்கும் இன்பத்திற்கும் அப்பாற்பட்டவன். இரண்டையுமே சமமாக பார்க்கும் வல்லமை கொண்டவன். அவன் நம் பக்கம் ஆதரவாக இருந்து நம்பிக்கை அளிக்க மாட்டானா ? என்று தேடுகிறோம்
நம் கூக்குரல் கேட்டு வந்து விட மாட்டானா என்று மருகுகிறோம். கண்ணீர் சிந்துகிறோம் !
நண்பர்களே மீண்டும் சொல்கிறேன் அவன் நடுநிலையானவன். நம் அனைவரின் பக்கத்திலும் எப்போதும் இருக்கின்றான் எந்த நிலையிலும். நீங்கள் சற்று சிரத்தை எடுத்து உற்று நோக்கங்கள்.
உங்கள் கூகுரலிர்க்கு எப்போதும் செவி சாய்கிறான். இந்த அண்டத்தின் சக்தியை உங்கள் நிவாரணத்திற்கு உதவும்படி பணிக்கிறான். நம்பிக்கையும் அளிக்கிறான்.அவனை உங்களால் உணர முடியும். நீங்கள் ஆழ்ந்து புரிந்துகொள்பவர்கள் ஆனால்,
அவனை ஐம்பூதங்களின் பல்வேறு பட்ட பரிணாமங்களாய் பார்க்கக்கூட இயலும் ! வானாக, மண்ணாக, மழையாக, கடலாக, காற்றாக, மரமாக, சிலையாக, சித்தனாக ஏன் மனிதனாக கூட கான இயலும்.
இருந்தும் ஒன்று ! மகிழ்ச்சியில் மறந்து விடுகிறோம் பெரும்பான்மையாக. இறைவனைத் தேடவோ உணரவோ முற்பட விழையோம் !
முயற்சி செய்து பாருங்கள். உங்கள் மகிழ்ச்சியை துன்பத்தில் இருப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் ! வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களாக அல்ல. கேட்காமல் கைகோர்க்கும் உதவும் கரங்களாய்.
உங்கள் கண்களும் கண்ணீர் சொரிக்கும், ஆனந்தமாய். உங்கள் உள்ளத்தில் உணர்வீர்கள் இறைவனை. நீங்கள் உள்ளத்தில் உணரும் இறைவன் உங்களிடம் ஆதரவு பெற்றவர்களுக்கு காட்சியளிப்பான் உங்கள் உருவாகவே !
புரிந்து கொண்டவர்க்கு அன்பே சிவமாகும்.
புரிதலை தேடுபவர்க்கு சிவமும் அன்பாகும்.
COMMENTS